Wednesday 20 February 2013

கல்வி கற்பிக்கும் முறை


 

        பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சுமார் 19 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இக்கல்வியானது மாணவர்களின் வருங்கால வாழ்க்கைக்கோ, வேலையில் சேருவதற்கோ உதவுவதில்லை. கல்வி வேறு வாழ்க்கை வேறாக இருக்கிறது. இதனால் அனேகர் வாழ்க்கையில் சரியான முன்னேற்றத்தை காண முடிவதில்லை.
 
 
       கல்விக் கூடங்களை தொழில் கூடங்களாக மாற்றவேண்டும். ஒரு மாணவன் அல்லது மாணவி கல்விக்கூடங்களை விட்டு வெளியே வரும்போது குறைந்தது 2 தொழில்களை செயல்முறையில் கற்று தேர்ந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரை பற்றி கற்றவன் தானாகவே அந்த கம்ப்யூட்டரை ஒவ்வொன்றாக முழுவதும் பிரித்துவிட்டு மறுபடியும் ஒன்று சேர்ந்து அதை மீண்டும் இயங்கச் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கல்வி வெறும் புத்தகக் கல்வியாக மட்டும் இருந்து விடக்கூடாது.

          மேலும் நாட்டு நடப்பு, அரசியல், நீதிமன்ற நடைமுறைகள், சட்டங்கள், குற்றமும் தண்டனையும், வார்டு உறுப்பினர் முதல் பிரதமர் வரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, அவருடைய அதிகாரங்கள் என்னென்ன, விவசாயம் செய்வது எப்படி, சமையல் செய்வது எப்படி, சாப்பாட்டிற்கு தேவை என்னென்ன, நோய்களும் மருந்துகளும், போதை பழக்கத்தினால் வரும் தீமைகள், இன்னும் மனித வாழ்க்கைக்கு அன்றாடம் தேவையான அனைத்தையும் கல்வி கூடங்களில் பயிற்றுவிக்க வேண்டும்.

         மேலும் நவீன கால பாடத்திட்டங்களை தெரிந்திராத பழைய கால ஆசிரியர்களை நீக்கி விட்டு, இன்றைய பாடத்திட்டங்களை நன்கு கற்று தேர்ந்த இளம் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். . சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே வருங்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞர்களை உருவாக்க முடியும். எனவே கல்வி கற்று முடித்த உடன் நேரடி வேலைக்கு செல்லக்கூடிய அனுபவக் கல்வி கற்றுதர அனைவரும் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம், வாருங்கள்!

Latest 10th Study Materials - 2013

Latest 10th Study Materials



Latest 10th Study Materials - 2013

Published By, 
CEO,SSA CEO, RMSA - Krishnagiri District.

Sunday 17 February 2013

தனித் தேர்வர்களுக்கு பிப்-19-ம் தேதி முதல் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு விநியோகம்


மார்ச் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்வெழுத அறிவிக்கப்பட்ட தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்.இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

ஆன்லைனில் பதிவு செய்த தேர்வர்களுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தேர்வுக் கூட அனுமதி சீட்டு வழங்கப்டவுள்ளது. பதிவு செய்த தேர்விடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்-லைனில் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையிலேயே தேர்வுக் கூட அனுமதிச் சீட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளது.ஆன்-லைனில் விண்ணப்பிட்ட போது வழங்கப்பட்ட விண்ணப்பத்துக்குரிய 10 இலக்க எண்ணை தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு விநியோக மையத்தில் தெரிவித்து அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். அனுமதிச் சீட்டில் பிழைகள் ஏதும் இருந்தால் "மேல்நிலை கூடுதல் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6' என்ற முகவரியில் நேலிலோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டும்.  

தேர்வு அனுமதிச் சீட்டில் புகைப்படம் பதிவாகாத தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவிலான 2 புகைப்படங்களை தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதிச் சீட்டில் ஒரு புகைப்படத்தை ஒட்டி மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் சான்றொப்பம் பெறவேண்டும். மற்றொரு புகைப்படத்தினை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கு வரவேண்டும். 200 மதிப்பெண் கொண்ட செய்முறைத் தேர்வு மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் மீண்டும் வரவேண்டும்.

முதன்முறையாக தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடத்தாள் 2 மற்றும் பகுதி 3-ல் சிறப்பு மொழி(தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்ய வேண்டும்.மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு குறித்த விவரத்தை அந்தந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.தத்கல் முறையில் ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மட்டும் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு நேரில் சென்று அனுமதிச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday 31 October 2012

இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு திட்டம்!


இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு திட்டம்!


இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை,
மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மேலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியரை தோல்வி அடைய செய்யக்கூடாது; அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள், அச்சட்டத்தில் உள்ளன.
தமிழகத்திலும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலில் இருக்கிறது.இந்நிலையில், ஒன்பது, 10ம் வகுப்பையும், இந்த சட்டத்தில் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து விரிவாக ஆலோசித்து, வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், தனி குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு, வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின், 60வது கூட்டம், நவ., 1ம் தேதி, டில்லியில் நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் கீதா புக்கல் தலைமையிலான குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த சட்டத்தை, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும், நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு முறை உள்ளது. இதனால், 10ம் வகுப்பிற்கு, இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகின்றனர் என, தெரியவில்லை. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை, அப்படியே, தமிழக அரசு ஏற்குமா எனவும் தெரியவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வராது. வரைவு அறிக்கை மீது, பல கட்டங்களில் விவாதம், ஆய்வு நடக்கும். அதன்பின், இறுதி அறிக்கையை தயாரித்து, மாநில அரசுகளுக்கு வழங்கும். அதன்மீது, முதல்வர் ஆய்வு நடத்தி, இறுதி முடிவை எடுப்பார். அடுத்த கல்வியாண்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.நமது மாநிலத்தில், 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு திட்டம் இருப்பதால், பொறுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

என்னென்ன கிடைக்கும்? இந்த சட்டம், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கும் வரும்போது, கல்விக் கட்டணம் ரத்து, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டுகள், மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை, இலவச மதிய உணவு, இலவச சைக்கிள் என, பல்வேறு திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு கிடைக்கும்.
MyFreeCopyright.com Registered & Protected